நாவலப்பிட்டி – கடியன்லேன தலவாக்கலை வீதியில் சேவையில் இருந்த மு. ப 6.30 மணிக்கு நாவலப்பிட்டி நகரில் இருந்து புறப்படும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கடந்த வாரங்களில் இருந்து சேவையில் இல்லாமையால் ஆசிரியர்கள், மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குகிறார்கள்.
இந்த பஸ் சேவையை நம்பியே நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் இவ் வழியே பயணத்தை மேற்கொள்கிறார்கள். பாடசாலை மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாக இப் பிரதேச பாடசாலை சமூகம் கவலையடைக்கிறார்கள்.
அது போலவே அரச, தனியார் காரியாலய நடவடிக்கைகளும் பெரிதும் தேக்க நிலையும், தொழில்த்துறை பாதிப்படைகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மாலை வேலையிலும் இப் பஸ் சேவை இன்மையானது காரியாலய உத்தியோகத்தர்கள் மேலும் அசௌகரியத்திற்கு உள்ளாவதை அறிய முடிகிறது. நாவலப்பிட்டி பஸ் டிப்போவினால் நிர்வகிக்கப்படும் இப் பஸ் சேவை குறித்து டிப்போ தரப்பினருக்க எடுத்துரைத்த போதிலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பயணிகள் கடும் விசனம் தெரிவிக்கிறார்கள்.
கடந்த வாரம் இப் பஸ்சை செலுத்திய சாரதி சேவையில் இருந்த போது இறந்தமை குறிப்பிடத்தக்கது. அவ் விடயத்திற்கு துயரம் தெரிவிக்கும் பயணிகள் மிக அவசியமாக உணரப்படும் இப் பஸ் சேவையை மாற்று ஏற்பாடுகளுடன் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையும் பெரும் சவாலாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
