மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 பிரதான வீதியின் பனிச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதி சொகுசு பஸ் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதையடுத்து பஸ்ஸின் சாரதி உட்பட உதவியாளர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கி அதனை பழுதுபார்த்துக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் சாரதியுடன் நால்வர் படுகாயமடைந்து நேற்றிரவு (25) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 39 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பஸ்ஸின் சாரதி மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
