கொலன்னாவ பிரதேச வெள்ளப்பெருக்குக்கான மூலக்காரணங்களை அடையாளங்கண்டு, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுத்தல் உள்ளிட்ட 16 விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமுல்படுத்துவதற்கு தேவையான விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள் கட்டமைப்புக்கான விரிவான அபிவிருத்தித் திட்டமொன்றை தயாரிப்பதற்காக கொழும்பு மாவட்டச் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், அது தொடர்பான தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இது தொடர்பாக (05.06.2023) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
1. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமை
கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை தேடி ஆராய்ந்து அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு தேவையான விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள் கட்டமைப்புக்கான விரிவான அபிவிருத்தித் திட்டமொன்றை தயாரிப்பதற்காக கொழும்பு மாவட்டச் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.06.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளப்பெருக்குக்கான மூலக்காரணங்களை அடையாளங்கண்டு, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்காக இலங்கை காணி அபிலிருத்திக் கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையும், நகர அபிவிருத்திச் சபையால் தயாரிக்கப்பட்டுள்ள கொலன்னாவ நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் கொட்டிக்காவத்த – முல்லேரியா நகர அபிவிருத்தித் திட்டத்தை நான்கு மாதத்தில் தயாரித்து நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட 16 விதந்துரைகளை குறித்த குழு சமர்ப்பித்துள்ளது. குறித்த விதந்துரைகளை சரியாக ஆராய்ந்த பின்னர் பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் ஊடாக அமுல்படுத்துவதற்கும், அது தொடர்பான தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்காக கௌரவ பிரதமர் அவர்களுடைய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.