பாடசாலைகளில் மின்கட்டணத்தைக் குறைப்பதற்காக கூரையின் மீது சூரிய மின்சக்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதான பாடசாலைகளை அண்டியதாக இவ்வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் நீர் வசதிகள் அற்ற 48 பாடசாலைகள் மற்றும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகள் மற்றும் பாதுகாப்பான நீர் வசதிகள் இல்லாத ஒன்பது பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மின்சார வசதிகளற்ற பாடசாலைகளில் 40, 50 மாணவர்கள் காணப்படுவதாகவும் அவை ஆரம்பப் பாடசாலைகள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்ப வகுப்புகளின் பின்னர் உயர் வகுப்புகளுக்கு வரும்போது மின்சக்தி பாடசாலைகளுக்கு அவசியமாவதுடன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மின்சாரம் அத்தியவசியம் என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.
