இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற தொழிற்சங்க ஆர்வலர்கள், வெனிசியுலா மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள ராமகிருஷ்ணா கடற்கரையில் 1,500ற்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூடி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் முதல் பெண்மணி சிலியா புளோரஸை அமெரிக்கா கடத்தியதைக் கடுமையாகக் கண்டித்து, வெனசியுலா மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் 18ஆவது அகில இந்திய மாநாட்டின் நான்காவது நாளில், அமெரிக்க ஏகாதிபத்திய படையெடுப்பு மற்றும் வெனிசியுலா மீதான குண்டுவீச்சைக் கடுமையாகக் கண்டிக்கும் ஒரு தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வெனிசியுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் எனவும் இந்த ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.
இலங்கையின் பதில்
வெனிசியுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்களையும், அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கடத்தியதையும், இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கண்டித்துள்ளது.
அந்த கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெனிசியுலாவின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசை ஆக்கிரமித்து அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்ற வெனிசியுலாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இராணுவத் தலையீட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்..”
உலகின் எந்தவொரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசையும் போலவே, வெனிசியுலா மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்தையும் அவர்களை யார் ஆளுவார்கள் என்பதையும் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமை உள்ளது எனவும், அதை மீற எந்த சக்திக்கும் உரிமை இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெனிசியுலா மீது அமெரிக்கா நடத்திய இந்த இராணுவப் படையெடுப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி, வெனிசியுலாவின் இறையாண்மை இருப்பு மற்றும் சுதந்திரத்திற்காக நிற்பதாக அந்த ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத் தாக்குதலையும் நிக்கோலஸ் மதுரோ கடத்தலையும் கண்டித்து லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழுவும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
