அதிகப்படியான சத்தத்தை எழுப்பிப் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்கள் மீது தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பில் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது பொதுவாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு அல்லது மத நிகழ்வுகளுக்கு உரிய அனுமதி பெறப்பட்டிருந்தாலும், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10.00 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.
அனுமதிக்கப்பட்ட நேரங்களிலும் ஒலியின் அளவு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் செயற்படுவோரின் ஒலி உபகரணங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்பதுடன், அவர்களுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்படும்.
அனுமதியற்ற சத்தத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பொதுமக்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 118, 119 ஆகிய அவசரகால பொலிஸ் இலக்கங்களிலோ புகாரளிக்க முடியும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
