பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12:35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெரேசியா பிரிவு தோட்டப் பகுதியில், 56 வயதுடைய வேலு புஷ்பராணி என்ற பெண் தொழிலாளி வழக்கம்போல தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது.
சிறுத்தையின் தாக்குதலில் கீழே விழுந்த அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுத்தை கடித்தபோது அவர் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த சக பெண் தொழிலாளர்கள் உடனடியாக அந்தப் பகுதிக்கு ஓடிவந்துள்ளனர்.
தொழிலாளர்களின் கூச்சலைக் கேட்டு மிரண்டுபோன சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த பெண் சக தொழிலாளர்களால் மீட்கப்பட்டு முதலில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மலையகப் தோட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சிறுத்தை நடமாட்டம் மற்றும் வனவிலங்குத் தாக்குதல்கள் பொதுமக்களையும் தொழிலாளர்களையும் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.
செய்தி வாசிப்பு நிறைவடைந்தது. தொடர்ந்து இணைந்திருங்கள் மலையகம் எஃப்.எம் உடன்.
