நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் போலி அலுவலகக் கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டுவந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரும் அடங்குகின்றார். ஏனையோர் நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தொடர்பாடல் மையங்களை (Communication Centers) நடத்தி வருபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எனத் தங்களைப் போலியாக அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கையொப்பங்களையும் போலி ஆவணங்களில் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்ட பின்னர், அதற்குச் சான்றாகப் போலி முத்திரைகள் பதிக்கப்பட்ட மாவட்டச் செயலகக் கடிதங்களை இவர்கள் வழங்கியுள்ளனர். இருப்பினும், பணத்தைச் செலுத்திய பொதுமக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்காத நிலையில், அவர்கள் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிய கடிதங்களை ஆய்வு செய்தபோதே இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல போலி முத்திரைகள், மாவட்டச் செயலகக் கடிதத் தலைப்புகள் மற்றும் கணினிகள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தவிர, மாவட்டச் செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளரின் பெயர்களைப் பயன்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் இவர்கள் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
