காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளைத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்ட ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட ஆறு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அவர் சம்மதித்ததைத் தொடர்ந்து, ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
2022-ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் ரூவன்புர பகுதியில் காணிகளை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமிருந்து ஆறு இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை இவர் பண மோசடி செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கள உத்தியோகத்தரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
