வரும் 2026 நவம்பர் முதலாம் திகதி முதல், நாட்டின் பல முக்கிய செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதி பெறும்போது, மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிக்கும் போது இனி TIN இலக்கம் கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், காணி உரிமங்களைப் பதிவு செய்தல், வணிகப் பதிவு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் புதிய கடன் அட்டைகளைப் (Credit Cards) பெறுவதற்கும் இந்த ‘TIN’ இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்கும் TIN இலக்கம் செல்லுபடியானது தானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெறாத பொதுமக்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ ‘ஈ-சேவை’ (e-Services) இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
