அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தம் சட்டமூலம் ஆகிய இரண்டிலும், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற விவாதங்களின் பின்னர், அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும், பொதுமக்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 110 இலிருந்து 120 ஆக உயர்த்தப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக இது அமுலுக்கு வருகின்றது.
