சொந்த வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், வாடகைக்கு வருவோரின் பின்னணி குறித்துச் சரிபார்க்குமாறு பொலிஸார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேடவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருட்களும் சட்டவிரோத ஆயுதங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளிலிருந்தே அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
வாடகைக்கு வருபவர்களைப் பற்றி எந்தவிதத் தகவல்களையும் திரட்டாமல், கட்டட உரிமையாளர்கள் வீடுகளை ஒப்படைப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாடகைக்கு விடப்படும் இடங்களில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப வீட்டின் உரிமையாளர்களும் சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது புதியவர்களின் நடமாட்டமோ காணப்பட்டால், அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாரிய குற்றச்செயல்களையும் போதைப்பொருள் பரவலையும் தடுப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
