”சிறுவர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்கள் நமது நிகழ்காலத்தின் மிக முக்கியமான பொக்கிஷங்கள்” என்பதை நினைவூட்டும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் இந்நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின்படி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்படுகின்றனர். வாழும் உரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சமூகத்தில் பங்கெடுக்கும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை பாகுபாடின்றி அனைத்துச் சிறுவர்களுக்கும் உறுதி செய்வதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.
2026-ஆம் ஆண்டின் தற்போதைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சூழலில், சிறுவர்கள் புதிய வகை சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திரைப் பயன்பாடு அதிகரிப்பு, இணையவழித் துஷ்பிரயோகங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் முக்கிய காரணிகளாக மாறியுள்ளன. அத்துடன் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர் உழைப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளும் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
இத்தகைய சவால்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டியது சமூகம் மற்றும் பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
இதனை உணர்ந்து, இலங்கையில் இம்முறை “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் அனைத்துச் சிறுவர்களுக்கும் ‘அத தெரண’ தனது இனிய சிறுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
