நுவரெலியா பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, லிந்துலை – மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01)பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பாடசாலை சுற்றுப்புறம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் ஆகியவற்றிற்குள் வெள்ள நீருடன் சேறும் சகதியும் புகுந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், சுகாதார நடைமுறைகளின்படி பாடசாலை வளாகத்தைச் சுத்திகரிப்பதற்காகவும், நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி இந்த விடுமுறை தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே பாடசாலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலை வளாகம் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பிற்குள்ளாவதால், உரிய முறையில் வடிகால் மற்றும் கால்வாய் அமைப்புகளைச் சீரமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
