கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
கொழும்பிலிருந்து இன்று ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில், குடிபோதையில் பயணித்த இருவர் இரு பெண்களுக்கு இடையூறு விளைவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக இது குறித்து பேருந்து நடத்துனரிடம் முறையிட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பேருந்து ஊழியர்கள், வட்டவளை பொலிஸ் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி, தகராறில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்து மீண்டும் ஹட்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
நீண்ட தூரப் பயணங்களின் போது இதுபோன்ற அசெளகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, மது அருந்தியவர்களைப் பேருந்துகளுக்குள் அனுமதிக்கக் கூடாது எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராகுல்
