சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களிடமிருந்து தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக CERT மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி விளம்பரங்களின் பின்னணியில் உள்ள மோசடிகள்
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைவதன் மூலம் இலகுவாக விசா பெற முடியும் என்றும், சில ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் குடியுரிமையைப் பெறலாம் என்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளும்போது, தங்களை உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திப் பேசுகின்றனர்.
கவர்ச்சி வாக்குறுதிகளும் போலி ஆவணங்களும்
பதிவுக் கட்டணம் மற்றும் முதலாம் ஆண்டுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்திப் பல்கலைக்கழகத்தில் இணையலாம் என்றும், பகுதிநேர வேலை மூலம் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் மோசடியாளர்கள் கவர்ச்சியாகப் பேசுகின்றனர். அத்துடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை (Scholarship) பெறலாம் எனப் பொய்யான வாக்குறுதிகளையும் வழங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாகப் பல்கலைக்கழகங்களின் படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இணையத்திலிருந்து திருடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகவும் நுட்பமாகப் பயன்படுத்தப்படுவதுடன், அவர்கள் அனுப்பும் சேர்க்கை ஆவணங்களும் உண்மையான பல்கலைக்கழக ஆவணங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
தலைமறைவாகும் மோசடிக் குழுக்கள்
பணத்தை வைப்பு செய்வதற்காக வெளிநாட்டு வங்கிக் கணக்கு எண்களை வழங்கி, எந்தவொரு சந்தேகமும் எழாத வகையில் சாத்தியமான அனைத்து வழிகளையும் இவர்கள் அடைத்து விடுகின்றனர். இவற்றை நம்பி பதிவுக் கட்டணம் மற்றும் முதற்கட்டக் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலுத்திய பின்னர், அந்த மோசடியாளர்கள் தொடர்புகளைத் துண்டித்து தலைமறைவாகி விடுவதாக CERT மையம் குறிப்பிட்டுள்ளது.
CERT மையத்தின் விசேட வழிகாட்டல்
எனவே, இணையத்தில் வெளியாகும் இதுபோன்ற விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என்றும், சட்டப்பூர்வமாகச் செயல்படும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் அல்லது முகவர்களை மட்டுமே அணுகுமாறும் CERT மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இவ்வாறான நபர்கள் வழங்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் அவர்கள் வழங்கும் வங்கிக் கணக்கு எண்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
