காவந்திஸ்ஸ யானையின் இழப்பு அரசாங்கத்துக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
காவந்திஸ்ஸ யானைக்கு நேர்ந்த துயரம் மீண்டும் நிகழ இடமளிக்க முடியாது;
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்திருந்த தேசிய பொக்கிஷமான காவந்திஸ்ஸ யானையின் துரதிர்ஷ்டவசமான இழப்புக் குறித்து அரசாங்கம் மிகுந்த அதிர்ச்சியடைவதாகவும், இவ்வாறான சுற்றாடல் குற்றங்களைச் செய்வோருக்கு எதிராகத் தராதரம் பாராது சுற்றாடல் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் 11ஆவது முறையாகக் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒக்டோபர் 19ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2026” விருது வழங்கல் விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இயற்கை வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்த நிறுவனங்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் சான்றிதழ் விருதுகள் உட்பட 195 விருதுகள் வழங்கப்பட்டதுடன், தங்க விருதுகள் பிரதமரின் பங்கேற்புடன் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் பின்வருமாறு கூறினார்:
ஒரு நாடு பொருளாதாரச் சுட்டிகளால் மட்டும் வளமடைவதில்லை, சுத்தமான காற்று, குடிநீர், ஆரோக்கியமான சூழல் கட்டமைப்பு ஆகியன நேர்த்தியாக இருப்பதும் மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு அவசியமாகும். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் வெறுமனே வீதிகளைச் சுத்தம் செய்வதற்கான ஒன்றல்ல; மாறாக, கழிவுகளைக் குறைத்து, கழிவுப் பொருட்களைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்து, சுற்றாடல் தொடர்பான மனப்பாங்கை மாற்றியமைக்கும் ஒரு தேசிய மாற்றத்துக்கான முன்னெடுப்பாகும்.
காவந்திஸ்ஸ யானையின் இழப்பைப் போன்ற துயரங்கள் மீண்டும் நிகழ இடமளிக்க முடியாது. பதவி, செல்வம் அல்லது செல்வாக்கின் அடிப்படையில் சுற்றாடல் சட்டம் மாறாது; அனைவருக்கும் சமமாகவே சுற்றாடல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அனுமதிப்பத்திரங்களை வழங்குவது முதல் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது வரை அனைத்தும் விஞ்ஞான ரீதியான சான்றுகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இடம்பெற வேண்டும். சுற்றாடலை அழித்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி எவ்விதத்திலும் நிலையான அபிவிருத்தியாக அமையாது.
காவந்திஸ்ஸ யானையைக் காப்பாற்றுவதற்கு வனஜீவராசிகள் அதிகாரிகளும் வனவிலங்கு மருத்துவக் குழுக்களும் கடும் முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், காயங்கள் மற்றும் தொற்று காரணமாக அந்த யானையைக் காப்பாற்ற முடியாமல் போனது. காவந்திஸ்ஸ யானையின் இழப்புக் குறித்து அரசாங்கம் மிகுந்த அதிர்ச்சியடைகிறது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காக, வனவிலங்குகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டத்தையும் கால்நடை மருத்துவக் கல்வியையும் மேலும் வலுப்படுத்துவோம்.
நீண்டகால மனித–யானை மோதலை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, 113 காடுகளை வனக் காப்பகங்களாக மாற்றி 71,900 ஹெக்டேயர் (180,000 ஏக்கர்) நிலப்பரப்பைப் பாதுகாக்கப்பட்ட நிலங்களாக மாற்றியுள்ளதுடன், விலங்குகளின் சுதந்திரமான நடமாட்டத்துக்காக 3 யானை வழித்தடங்களும், யானை முகாமைத்துவத்துக்கெனப் பிரத்தியேகக் காப்பகம் ஒன்றும் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் களப்பணிகளை வலுப்படுத்துவதற்காக 100 கப் ரக வாகனங்கள், 185 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 9 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், யானை வேலிகளைப் பராமரிப்பதற்காக 3,500 யானை வேலி உதவியாளர்களும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5,000 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
26 வருடங்களின் பின்னர் சுற்றாடல் சட்டத்தைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சுற்றாடல் அமைச்சுக்கு 1,600இற்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுற்றாடல் பாதுகாப்பு என்பது தற்காலிகமான ஒரு திட்டமல்ல; மாறாக, அது அரச கொள்கையிலும் ஒவ்வொரு பிரஜையினதும் அன்றாட வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற வேண்டும். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரைப் பசுமைத் தொழில்நுட்பத்தை நோக்கி வழிநடத்துதல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியில் நடைமுறைச் சுற்றாடல் திறன்களை ஊக்குவித்தல், மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு சுற்றாடல் சார்ந்த நன்னெறிப் பொறுப்பை வளர்த்தல் ஆகியவை அத்தியாவசியமாகும்” எனக் கூறிய பிரதமர், எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான, அழகான, சுத்தமான நாட்டைக் கையளிப்பதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் விருதாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
