இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலக வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அநீதியை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் இத்திருநாளின் உண்மையான அர்த்தம், வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவத்தின் ஒளியை ஏற்றி வைப்பதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும் தேர்ந்தெடுத்து, சிறப்பான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்கு தீபாவளி சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப அரசு உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
