இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்” என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி ஆர்டி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வெறித்தனமான ஊடகங்களும், அங்கிருந்து வரும் சில பொறுப்பற்ற அறிக்கைகளும் எங்களை சில கட்டாயத்துக்கு நிர்பந்திக்கின்றன. அங்கிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் போர் என்று வரும் போது நாங்கள் எண்ணிக்கை பலம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான பதிலடியோடு, அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். பாகிஸ்தான் மக்களின் முழு ஆதரவுடன் ராணுவம் முழு சக்தியையும் வெளிப்படுத்தும்.” என்றார்.
