போலி ஆவணங்களைத் தயாரித்து, வைத்தியர்களைப் போல் செயற்பட்டு வந்த இருவர், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குருநாகல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 33 மற்றும் 62 வயதுடைய மீகலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மருந்துத் தொகுதியுடன் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மீகலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்ட மருந்தாய்வாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மீகலாவ பொலிஸார் இணைந்து இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
