தலவாக்கலையில் குளவித் தாக்குதல் – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் குளவிக் கூடுகள் கலைந்து தாக்கியதில், இரு மாணவர்கள் உட்பட மூவர் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு மாணவர்கள் இன்று (02) காலை சமூகமளித்துக் கொண்டிருந்தபோது, காலை 7.30 மணியளவில் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியோரத்தில் அமைந்திருந்த குளவிக் கூடுகள் கலைந்து தாக்கியுள்ளன.
இதில் இரு மாணவர்களும் பெண் ஒருவரும் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care Unit) சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பகுதியில் நீண்டகாலமாக குளவிக் கூடுகள் காணப்படுவதுடன், அண்மைக்காலமாக அவை கலைந்து மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
மேலும், தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை பிரதான நகருக்குச் செல்லும் வீதியின் பல இடங்களிலும் இவ்வாறான குளவிக் கூடுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு குறித்த குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கௌசல்யா
