சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய பாலின விதியின் காரணமாக இனிவரும் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு கூட்டம் இந்தியாவின், அஹமதாபாத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, புதிய பாலின தகுதி விதிமுறைமைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹோமோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளுர் போட்டிகளில் அந்தந்த நாடுகளின் பாலின வரையறை சட்டதிட்டங்களுக்கு அமைவாக தீர்மானம் எடுக்க முடியுமெனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் கலந்து கொண்ட முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு இனிவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பிறந்த டேனியல் மெக்காஹே, கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், கனடா மகளிர் கிரிக்கெட் அணியில் இந்த ஆண்டில் அறிமுகமாகி, விளையாடி வருகிறார்.
