மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி விவசாயி பலி
மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை, மீட்டியாகோட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், விவசாயி ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சாமிமலை, பெயர்லோன் தோட்டத்தின் ‘சின்ன சூரியகந்தை’ பிரிவைச் சேர்ந்த மாரிமுத்து கந்தசாமி (வயது 62) ஆவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
இன்று காலை சுமார் 9:30 மணியளவில் தனது அன்றாட பணிக்காக, மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குச் சென்றபோதே இவர் எதிர்பாராதவிதமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கியுள்ளார். மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகிப் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் இத்தகைய மின் வேலிகள், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
