Author: Thana
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 ஆண்களும், 6 பெண்களும், இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணித்து கொண்டிருந்த வேனின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பட்டுள்ளனர். யாத்திரைக்கு சென்று கொண்டிருந்த வெலிகந்த பகுதியை சேர்ந்தவர்களே இந்த விபத்து சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவில் பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் நேற்று மாலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது. அந்த காட்சியை உள்ளூர் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். தற்போது சமூக வலைதளத்தில் அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சுமார் 1,717 கோடி ரூபாய் செலவில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அகுவானி சுல்தான்கஞ்சில் கங்கை பாலம் என இது அறியப்படுகிறது. இதுவரை இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலம் சூறாவளி காற்றில் சேதமடைந்ததாக தகவல். அதே போல இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் இலங்கைக்கு இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகம் வரவுள்ளார். மாலை 5 மணியளவில், சர்பானந்தா சோனோவால், சென்னை கப்பல் முனையத்தில் இடம்பெறும் நிகழ்வின்போது கார்டில்லியா குரூஸ், என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சென்னையின் கிழக்கு கடற்கரையை, கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம என்பவர் மீது இன்று (05) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (05) காலை மேல் மாகாணத்தின் மீகொட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த 62 வயதுடைய நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டிலிருந்து வல்பிட்ட கெமுனு மாவத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் நான்கு முறை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நபரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்
உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட யுவதியின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு இவர்கள் இருவரும் சென்று இரவு முகாமிட்டுள்ளனர். இதன்போது அவர்கள் மீது காட்டு யானை தாக்கியதில் யுவதி உயிரிழந்த நிலையில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலங்கள் காரணமாக கொஸ்லந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொம்பனிவீதி யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனிவீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (4) மாலை 5.00 மணியளவில் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சீன நபர் உதவி பொறியாளராக பணியாற்றியவராவார்.
பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். திருகோணமலை அபேபுர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும் பல சிப்பாய்களுடன் இணைந்து கடமையில் இந்த போது பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகாமையில் குறித்த சார்ஜன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிலானி ரத்நாயக்க, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
இராகலை நகர் தேர் திருவிழாவில் மோர் பந்தலின் போது பாவிக்கப்பட்ட ஆயிரம் கணக்கான disposable cup கள் முறையாக சேகரித்து சூழலுக்கு மாசு இல்லாமல் கறி மிளகாய் விதைகள் விதைப்பதற்காக விவசாயி ஒருவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஏராளமான விவசாயிகள் கறி மிளகாய் கன்றுகள் வளர்ப்பதற்காக இக் கோப்பைகளை தேடி சேகரிக்கின்றனர். இனிவரும் காலங்களில் நீங்களும் சூழலுக்கு மாசில்லாமல் உங்கள் நிகழ்வுகளில் பாவிக்கும் கோப்பைகளை அவர்களுக்கு முறையாக சேகரித்து வழங்கலாம். இதுவரை சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இக்கப்புகள் மீள்சுழற்சி செய்யப்படுகின்றமை மனநிறைவை தருகிறது.