இலங்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த தமிழ் இசை ரசிகர்களுக்கு, செப்டெம்பர் 30 ஆம் திகதி, யாழ். நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்திய இசை நட்சத்திரக் கலைஞரான சந்தோஷ் நாராயணன், செப்டெம்பர் 30 ஆம் திகதி பி.ப. 6.00 மணி முதல், யாழ்ப்பாணம் கோட்டை பகுதியை அண்மித்த, முற்றவெளி மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்று, ரசிகர்களை இசைப் பரவசத்தில் ஆழ்த்தவுள்ளார். இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றமை தொடர்பில் சந்தோஷ் நாராயணன் கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச மொழியான இசையினூடாக, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கலாசார உறவுகளை கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி அமைந்திருக்கும். இலங்கை மற்றும் இந்திய கலைஞர்களை ஒன்றிணைத்து, மனம்மறவாத இனிமையான மாலைப் பொழுதை இலங்கையின் ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது எமது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.” என்றார்.
2012 ஆம் ஆண்டு சந்தோஷ் நாராயணன் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகமாகியதன் பின்னர் அவரின் படைப்புகளுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்திருந்தன. இசைக்கு எல்லைகள் இல்லை என்பதுடன், விருதுகளை வென்ற இசையமைப்பாளர் எனும் வகையில், இலங்கையின் ரசிகர்களை மாத்திரமன்றி, உலகளாவிய ரசிகர்களை சென்றடையவுள்ளார். உலகளாவிய ரீதியில் காணப்படும் இலங்கையின் சுயாதீன கலைஞர்களையும் இந்த நிகழ்ச்சி கொண்டிருக்கும்.
கொழும்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இசை நிகழ்ச்சி தொடர்பில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் சந்தோஷ் நாராயணன் கருத்துத் தெரிவிக்கையில், “கலாசாரப் பாரம்பரியங்கள் நிறைந்த நகரமாக யாழ்ப்பாணம் அமைந்துள்ளதுடன், இசை மற்றும் கலையம்சங்களுக்கு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இனிய மாலைப் பொழுதை இசையினூடாக அனுபவிப்பதற்கு வாய்ப்பு வழங்குகின்றமைக்காக ஏற்பாட்டாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.