Author: Thana
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா அவர்கள் இன்று சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன முன்னிலையில் (22) பதவிச்சத்தியம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தம்மிக பெரோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிச்சத்தியம் செய்து கொள்வதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு (21) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டது. 1967 டிசம்பர் 28ஆம் திகதி களுத்துறை கட்டுக்குறுத்தை பிரதேசத்தில் பிறந்த தம்மிக்க பெரேரா, ஹொரண தக்ஸிலா வித்தியாலையத்தின் பழைய மாணவராவார். அத்துடன் இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாதாரியாவார். எச்.ஈ. ஜனகாந்த சில்வா, பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர்…
ஆப்கானிஸ்தானின் தலீபான் ஆட்சியாளர்கள், சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று பதிவான பூமியதிர்ச்சியினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். ஆப்கானிஸ்தான் 20 வருடங்களின் பின் முகங்கொடுத்த மோசமான அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது. பூமியதிர்ச்சியினால் சில கிராமங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வரவேண்டுமென தலீபான் ஆட்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை தலீபான் அமைப்பினரின் ஆட்சியை சர்வதேச நாடுகள் பல நிராகரித்துள்ளன. இவ்வாறான சூழலில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்குமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. எனினும் சில நாடுகள் மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாவை நிதியுதவியாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருந்தது. அதில் 50 வீதமான தொகையே வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு சில நிபந்தனைகளுடன் எஞ்சிய நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முதற்கட்டமாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபா வழங்கப்படவுள்ளது. இதேவேளை எரிபொருளுக்கான வரியை 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ‘PMB அரிசி’யை (PMB Rice) அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்ய ,விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோவாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் பல இடங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் 200,000 அரிசி பொதிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளில் பாரிய நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வின் தாக்கம் பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியின் ஒருசில பிரதேசங்களிலும், பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகரத்திலிருந்து 44 கிலோ மீற்றர் தூரத்தில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளமை தொடர்பான காட்சிகளை ஒருசிலர் வீடியோ பதிவுகளாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். www.gov.lk என்ற இணையத்திற்குள் பிரவேசித்து இதுபற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அரச சேவையாளர்களின் ஓய்வூதியத்திற்கோ சேவைக்காலத்திற்கோ பாதிப்பு இல்லாத வகையில் 5 வருட காலம் வெளிநாட்டில் தொழில்புரிய இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் ஒரு தொகுதி இன்றைய தினம் பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகல ,பதுளை ஹாலி எல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு பகுந்து அளிப்பதற்காக பதுளை புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதில் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 1800 அரிசி மூட்டைகளும் ,லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் ,பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசியை மூட்டைகளும் ,ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன. இந்த அரிசி பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினம் இன்றாகும். இதனையொட்டி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவுக்கு அமைய, 2015ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய யோகா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.
காலாவதியாக இருக்கும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றில் காணப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க டின் மீன்கள் நேற்று (20) மாலை கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பன்னல மூக்கலான பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணைகளில் இருந்து மோசடி கணடறியப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று (20) முதல் அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்த அளவான பணிக்குழாமை சேவையில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் ,அத்தியாவசிய சேவைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.