Author: Thana

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், டைமண்ட் லீக் இறுதிப் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே இலங்கை வீரர் என்ற வரலாற்றுப் பதிவை ருமேஷ் தரங்க தனதாக்கிக்கொண்டார். இலங்கை நேரப்படி இன்று (06) அதிகாலை நிறைவடைந்த இப்போட்டியில், அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்தச் சாதனையை நிலாநாட்டினார். இப்போட்டியில் ருமேஷிற்கு கடும் சவாலாக விளங்கிய போலந்தின் டேவிட் வேக்னர் (Dawid Wegner) 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும், 83.99 மீற்றர் தூரம் எறிந்த ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் கெஷோர்ன் வோல்கோட் (Keshorn Walcott) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Read More

தெல்தெனிய, விக்டோரியாப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தின் மீது பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது 36 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமையத் தெல்தெனிய பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட இச்சோதனையின் போது, கஞ்சா, ஐஸ், ஹஷிஸ், எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 43 வயதுக்குட்பட்ட கண்டி, பேராதனை, தெஹிவளை மற்றும் ஹங்குராங்கெத உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய 16 வயதுடைய அவரது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘கொஸ்கொட தாரக்க’ என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பாடசாலை நிகழ்வுகளில் போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி பாடசாலை இலச்சினையைப் (Logo) பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்கச் சுற்றறிக்கைக்கு அமைவாக, பாடசாலை இலச்சினை பயன்படுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் பாடசாலை விழாக்களாகவே கருதப்படும் என கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் கிளையின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கையை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கான முழு அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More

நானுஓயா – எடின்பரோ ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! நுவரெலியா, நானுஓயா – எடின்பரோ தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ​நானுஓயா – எடின்பரோ தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகரன் மற்றும் அப்புத்தளையைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் தில்ஷன் ஆகிய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ​சம்பவம் குறித்துத் தெரியவருவதுடன், நுவரெலியா மாவட்ட நீதிபதியின் மரண விசாரணைகளைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காகச் சடலங்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என நானுஓயாப் பொலிஸார் தெரிவித்தனர். ​இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.தீபன்ராஜ

Read More

நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புரூக்சைட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி நனிகா, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 152 புள்ளிகளைப் பெற்றுப் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ​செல்வகுமார் – ஜெயந்திமாலா தம்பதியினரின் அன்பு மகளான நனிகா, பல்வேறு பொருளாதாரச் சவால்களையும் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு, மனம் தளராது இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். ​சூழ்நிலைகள் எத்தகையதாக இருப்பினும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றியை ஈட்ட முடியும் என்பதற்கு இம்மாணவியின் சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மாணவியின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் குறைக்க உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ​இருப்பினும், இம்முறை சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்தச் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

Read More

இதுவரை சிங்கள மொழி மூலமான படைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மதிப்புமிக்க ‘விதர்சனா’ (Vidarshana) இலக்கிய விருது, வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ் படைப்பாளி ஒருவருக்கு வழங்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. ​கைப்பிரதி சிறுகதை ஆக்கத்திற்காக,   படைப்பாளி சுதர்மமஹா ராஜன் அவர்களுக்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கோலாகலமான விருது வழங்கும் விழாவில் இந்தச் சிறப்பிடம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ​ சுதர்மமஹா ராஜன் அவர்களுக்கு மலையக ஊடக நெட்வொர்க் (Malayagam Media Network) சார்பாக எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு! ​நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. ​இந்த விலைக் குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ​இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ​மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. ​அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More